/

பழனி தைப்பூசத் திருவிழா:  பாதயாத்திரை பக்தர்கள் இலட்சக்கணக்கில் வருகை

பழனி தைப்பூசத் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் திங்கள்கிழமை பழனி நோக்கி திண்டுக்கல் சாலையிலும், தாராபுரம் சாலையிலும், உடுமலை சாலையிலும்

News image
Updated On :2 பிப்ரவரி 2015, 2:03 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பல இலட்சம் பக்தர்கள் பழனியில் குவிந்ததால் காணும் இடமெங்கும் காவி உடை தரித்த பக்தர்களே இருந்தனர்.

பழனி தைப்பூசத் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் திங்கள்கிழமை பழனி நோக்கி திண்டுக்கல் சாலையிலும், தாராபுரம் சாலையிலும், உடுமலை சாலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் இருந்தனர். இடும்பன் கோயில், சண்முகநதியில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நதியில் நீராடினாலும் பக்தர்கள் பயன்பாடு கருதி கரையில் தண்ணீர் தொட்டிகள், ஷவர்பாத்கள் அமைக்கப்பட்டிருந்தது.  மேலும், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தது.  பக்தர்கள் நீராடும்போது விபத்து நேரிடாவண்ணம் தீயணைப்பு வீரர்கள் சிறிய படகுகளில் ரோந்து சுற்றியவண்ணம் இருந்தனர். 

காரைக்குடியில் இருந்து வந்திருந்த நகரத்தார், நாட்டார் காவடிகள் ஆயக்குடி அகோபிலேஸ்வரர் கோயிலில் தங்கி திங்கள்கிழமை கிளம்பியபோது காவடி கூட்டத்தை கண்டு வணங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர்.  இந்தமுறை நகரத்தாரின் வைரவேலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  பக்தர்கள் செல்லும் படிவழிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் எங்கும் காவிவேட்டியுடன் உள்ள பக்தர்களே காணப்பட்டனர். மலைக்கோயிலில் குவிந்த கூட்டத்தால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தனர்.  தவிர அடிவாரம், சன்னதி வீதி, பேருந்து நிலையங்களில் போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.  நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தால் ஓரளவு கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.  கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் உடனடியாக வெளியூர் கிளம்பி செல்ல வசதி இருந்தது. 

மாவட்ட நிர்வாகம், திருக்கோயில் நிர்வாகம் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.